எனது அறிவுரையை ஏற்றால் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும் – பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிடமுடியும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு.
எதிர்க்கட்சிகளின் பலம் – நிதிஷ் குமார் அறிவுரை:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது பொது மாநாட்டில் பேசிய அம்மாநில நிதிஷ் குமார், 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பலம் குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காங்கிரஸ் எனது ஆலோசனையை ஏற்று ஒன்றாகப் போராடினால், வரும் தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்கு கீழே முடக்கிவிட முடியும், ஆனால், அவர்கள் எனது ஆலோசனையை ஏற்கவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.
எனது அறிவுரையை காங்கிரஸ் ஏற்க வேண்டும்:
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க காத்திருப்பதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறிய அறிவுரையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறிய நிதிஷ் குமார், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் சிறப்பாக நடைபெற்றது, அவர்கள் இதோடு நின்றுவிட கூடாது எனவும் குறிப்பிட்டார்.
பாஜக தலைவர் கிரிராஜ் சிங் பதிலடி:
நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் கிரிராஜ் சிங், கடன் வாங்கிய எண்ணெயில் விளக்கை ஏற்றுபவர்கள் இந்தியாவுக்கு புதிய நாளைக் காட்ட முடியுமா?, பீகார் 17 ஆண்டுகளாக வளர்ச்சியடையவில்லை, ஒரு மாதமாக நிதீஷ் குமார் தீர்வைத் தேடுகிறார். அவரது ஆட்சியில் மாநிலம் மீளவில்லை, இப்போது பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை தேடிக்கொண்டிருக்கிறது என்றுள்ளார்.