தமிழக பாணி நாடகங்களை ஆந்திராவில் பாஜக அரங்கேற்ற முடியாது !

Default Image

தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. தமிழ்நாடு பாணி நாடகங்களை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது எனவும் சந்திரபாபு நாயுடு பாஜக-வை எச்சரித்துள்ளார்.

மத்தியிலிருந்து கூடுதல் நிதியைப் பெறும் வகையில், ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி வலியுறுத்தி வந்தது. பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதோடு, ஆந்திரத்திற்கு நிதிஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக தெலுங்குதேசம் புகார் கூறியது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் தெலுங்குதேசம் சார்பில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் பதவி விலகினர். இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடித்தது. இந்நிலையில், புதுத்தலைநகர் அமராவதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்திற்கு பாஜக உதவி செய்யாததோடு, தமிழ்நாட்டைப் போல ஆந்திர அரசியலிலும் தலையிட முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

தமிழக பாணி நாடகங்களை ஆந்திராவில் பாஜக அரங்கேற்ற முடியாது என்றும் அவர் எச்சரித்தார். தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணை பாஜக தூண்டிவிட்டதாக ஏற்கெனவே சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

மோடியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மற்றவர்களை தமக்கு எதிராக தூண்விட்டால், தாம் கோழையைப் போல அஞ்ச வேண்டுமா எனவும் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமையை பலவீனப்படுத்தி, தங்களது விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிப்பது பாஜக-வின் பழக்கமாகிவிட்டது என்றும் அவர் சாடினார். குற்றவழக்குகளில் சிக்கியவர்கள் வேண்டுமானால் பாஜக-வின் விருப்பத்திற்கு ஆடலாம் என்றும், தாம் வாழ்க்கையில் எதற்கும் அஞ்சியதில்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிக்கப் போவதாக தெலுங்குதேசம் கட்சி சூசகமாகத் தெரிவித்திருந்தது. தற்போது தெலுங்குதேசம் கட்சியே மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக அக்கட்சியின் எம்.பி. தொட்டா நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்