மீண்டும் ஓம் பிர்லா.? சபாநாயகர் குறித்து பாஜக முக்கிய ஆலோசனை.!

Om Birla

டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும், மக்களவை சபாநாயகர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சபாநாயகர் பதவி குறித்து நிபந்தனைகள் வைத்ததாக தகவல்கள் வெளியானாலும், அதனை இரு கட்சிகளும் நிராகரித்துவிட்டன. சபாநாயகர் தேர்வில் NDA கூட்டணி கட்சி ஆலோசனைக்கு பின் எடுக்கும் முடிவுக்கு ஆதரவளிப்போம் என்று தெலுங்கு தேசம் கட்சியும்,  சபாநாயகர் தேர்வு குறித்து பாஜக எடுக்கும் முடிவுக்கு ஆதரவளிப்போம் என நிதிஷ்குமாரின் JDU கட்சியும் கூறியுள்ளது.

அடுத்த வாரம் ஜூன் 24 (திங்கள்), ஜூன் 25 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் மீதமுள்ள எம்பிக்களின் பதவி பிரமாணம் நடைபெற உள்ளது. ஜூன் 26ஆம் தேதி (புதன்) நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சபாநாயகர் யார் என பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

வரும் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மக்களவை சபாநாயகர் யார்.? துணை சபாநாயகர் யார் என ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் சபாநாயகராக முன்னாள் சபாநாயகர் பாஜக எம்.பி ஓம் பிர்லாவை பாஜக தலைமை தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், துணை சபாநாயகர் பதவி கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் சனி, ஞாயிறு கிழமையில் சபாநாயகர் குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்