பட்ஜெட் 2025 : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்.., விமர்சனமும்…,
மத்திய பட்ஜெட் 2025 குறித்து பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் வரவேற்பையும், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன.

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு பாஜக மற்றும் பாஜக ஆதரவுவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் பட்ஜெட் உரை தொடங்கும் முன்னரே வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பட்ஜெட் 2025-ல் பலரும் எதிர்பார்த்த வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சம் வரையில் உயரத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாத வருமானம் ரூ.1 லட்சம் வரையில் சம்பளம் பெரும் தனி நபர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்திற்கு பல்வேறு திட்ட அறிவிப்புகள், விவசாயிகளுக்கான கடனுதவி உயர்வு, புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.20 கோடி வரையில் கடன் மானியம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்தாண்டு இறுதியில் பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஓரிரு மாநிலங்களுக்கு மட்டுமே பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் இருந்தது என்றும், வருமானவரி விலக்கு உச்சவரம்பை தவிர்த்து வேறு எதுவும் நல்ல திட்டங்கள் யில்லை என்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு :
தேர்தல் நடைபெற உள்ள டெல்லியையும், இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ள பீகாரையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை :
நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில் 20 பேர் வறுமையில் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட் கானல் நீர் போல உள்ளது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டமும் இல்லை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை :
புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என அறிவித்ததற்கு தமிழக பாஜக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். அரசின் இந்த முடிவு நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்கும் என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழிசை சவுந்தராஜன் :
ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒருவர் ஒரு வரத்திலேயே லட்சாதிபதியாகலாம். பட்ஜெட் உரையை முடிக்கும் முன்னரே பலரும் கொண்டாடும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
தயாநிதி மாறன் :
இந்த வருடம் தேர்தல் வரவுள்ளதால், கட்டமைப்பு சார்ந்து அனைத்து திட்டங்களும் பீகாருக்கு சென்றுள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்தவொரு திட்டமும் இல்லை. வருமானவரி விலக்கு அறிவித்ததும் குழப்பம் உள்ளது. ரூ.12 லட்சம் வரை வரி இல்லை என கூறுகிறார். ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரையில் 10% வரி இருக்கிறது. இது குழப்பம் அடைய வைத்துள்ளது என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.