நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக எம்பிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அம்பேத்கர் குறித்த இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.
நேற்று முதலே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி, விசிக எம்பி திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் புகைப்படம் அடங்கிய பாதைகளை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, நான் பேசியதை காங்கிரஸ் கட்சியினர் திரித்து பேசுகிறார்கள். அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமித்ஷா பேசிய கருத்தை காங்கிரஸ் கட்சி திரித்து பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதுவும் செய்யவில்லை என கூறி பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.