பரவும் பறவைக்காய்ச்சல்: ஜான்சியில் உள்ள பள்ளியில் 4 காகங்கள் உயிரிழப்பு!
உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு காகங்கள் உயிரிழந்த நிலையில், அது குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும்.
அந்தவகையில், பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு காகங்கள் உயிரிழந்து கிடந்தது. உயிரிழந்த அந்த காகங்களின் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பினார்கள். அந்த அறிக்கையில், அந்த காகங்கள் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.