பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!
பீகார் இளைஞர்களுக்கு, தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் எனக்கோரி பீகாரின் வெகுசராய் பகுதியில் காங்கிரஸ் பேரணி நடத்தி வருகிறது.

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “பலாயன் ரோகோ, நவுக்ரி தோ” (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு) என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் ” பிஹார் இளைஞர்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறமையாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்கள். ஆனால், அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால், வேலை தேடி டெல்லி, மும்பை, குஜராத் போன்ற பிற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை உள்ளது.
இது பிஹார் மக்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பெரும் பின்னடைவு. இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே வேலை பெறுவதற்கு உரிய கொள்கைகளும் திட்டங்களும் தேவை. இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலமான பிஹாரிலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும். இடம்பெயர்வையும் வேலையின்மையையும் எதிர்த்து எழுந்திருக்கும் இந்தக் குரல் மாற்றத்தை உருவாக்கும்” என்று குறிப்பிட்டு பேசினார்.
மேலும், இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளை சட்டைகள் அணிந்து பங்கேற்றனர். பிஹாரின் இளைஞர்களின் உணர்வுகளையும், அவர்களது போராட்டங்களையும், கஷ்டங்களையும் உலகிற்கு எடுத்துச் செல்வதே இதன் நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இது பிஹார் மாநிலத்தில் வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு பிரச்னைகளுக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.