பீகார் ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
டெல்லியில் இருந்து ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலானது, பீகாரின் பக்ஸர் மாவட்டம், ரகுநாத்பூர் ரயில்வே நிலையம் அருகே நேற்று மாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும், ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி” ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், தடம் புரண்ட அனைத்து பெட்டிகளும் சசீரமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.