பீகார்: என்னது?…2 சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் 900 கோடிக்கு மேல் டெபாசிட்டா?…!
பீகாரில் உள்ள பள்ளி சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் பெரும் தொகையைப் பெற்ற சம்பவம்,அது அவர்களின் குடும்பங்களை மட்டுமல்ல, முழு கிராமத்தையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்று லைவ்ஹிந்துஸ்தான் செய்தி இதழ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
பீகார்,கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கும் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகிய சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 900 கோடிக்கு மேல் இருக்கும் என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) உள்ளூர் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (CPC) சென்று, அரசு சீருடைகளுக்காக மாநில அரசால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பற்றி அறிந்து கொள்ள முயன்றபோது,தங்களது வங்கிக் கணக்கில் பெரும் தொகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுவர்கள் உத்தர பீகார் கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். விஸ்வாஸின் கணக்கில் ரூ. 60 கோடியும், குமாரின் கணக்கில் திடீரென ரூ. 900 கோடியும் இருந்தது என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,கிளை மேலாளர் மனோஜ் குப்தா இந்த விவகாரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டு பணம் எடுப்பதை நிறுத்தினார்.அதன்பின்னர்,ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காகரியா மாவட்டத்திலிருந்து இதே போன்ற ஒரு சம்பவம் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு இந்த செய்தி வந்துள்ளது.அதாவது,ரஞ்சித் தாஸ் என்ற தனியார் பயிற்சியாளர் வங்கி பிழை காரணமாக அவரது கணக்கில் ரூ. 5.5 லட்சம் பெற்றார், ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும் அந்த தொகையை திருப்பி தர மறுத்துவிட்டார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக, அரசாங்கம் அந்த தொகையை எனது கணக்கில் அனுப்பியதை உணர்ந்தேன். இந்த நாட்களில், நிறைய வங்கி மோசடிகள் நடைபெறுகின்றன, அதனால் நான் திருப்பி தரவில்லை. எனக்கு சில தேவைகள் இருந்ததால்,அந்த தொகையில் நான் ரூ. 1,60, 970 செலவு செய்தேன். எனக்குத் தேவைப்படும் போது அரசாங்கம் கொஞ்சம் பணம் அனுப்பியதில் மகிழ்ச்சி. எனது காலி கணக்கிற்கு வேறு எப்படி பணம் சேரும்? ”என்று தாஸ் போலீசாரிடம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை போலீசார் தாஸை கைது செய்தனர், அவர் புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.