பீகாரில் முடிவிற்கு வரப்போகிறதா நிதிஷ் குமாரின் ஆட்சி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் புதிய தகவல்!
தேர்தலுக்கு பின் நடந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இதில் மெகா கூட்டணி, 120 இடங்களை கைப்பற்றும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு, இன்று காலை 7 மணி முதல் தொடங்கி தற்பொழுது நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி.
இதில் ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சிகள் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக எளிதாக வெற்றிபெற்றுவிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தலுக்கு பின் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு நடத்தியது.
அந்த கருத்துக்கணிப்பில் முடிவுகள் தற்பொழுது வெளியான நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.