மோடி குடும்பப்பெயர் அவதூறு வழக்கு.! ராகுல் காந்திக்கு பீகார் நீதிமன்றம் சம்மன்
மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி கூறியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு வழக்கில், பீகார் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குஜராத், சூரத் நீதிமன்றம். இதனால் ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, “எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பதை பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இது மோடி சமூகத்தையே இழிவுபடுத்தியதாக சூரத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
பின்னர், ராஜ்ய சபா எம்பி சுசில்குமார் மோடி பாட்னா எம்எல்ஏ-எம்பி நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்து இருந்தார். தற்போது, இந்த மனுவை விசராணைக்கு ஏற்றுக் கொண்ட பாட்னா நீதிமன்றம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, சுஷில் மோடி, முன்னாள் அமைச்சர் மற்றும் பாங்கிபூர் எம்எல்ஏ நிதின் நவின், திகா எம்எல்ஏ சஞ்சீவ் சவுராசியா மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் மணீஷ் குமார் ஆகியோரின் சாட்சியங்களை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.