பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!
பீகார் மாநில சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக கூட்டணி தராரி, ராம்கர், இமாம் கஞ்ச், பெலாகஞ்ச் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி .
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 10 வேட்பாளர்களும், ராம்கர் தேர்தலில் 5 பேரும், இமாம்கஞ்சில் 9 பேரும், பெலகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலுக்கான முடிவுகள் காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தராரி, ராம்கர் தொகுதிகளில் பாஜகவும், பெலாகஞ்ச்சில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளது. இமாம்கஞ்ச் தொகுதியை பாஜகவின் கூட்டணியான எச்.ஏ.எம். கட்சி தக்க வைத்துக் கொண்டது.
பெலகஞ்ச் : தொகுதியில் ஜேடியு வேட்பாளர் மனோரமா தேவி அமோக வெற்றி பெற்றுள்ளார். மனோரமா தேவி 73,334 வாக்குகள் பெற்று தனது போட்டியாளரான விஸ்வநாத் குமார் சிங்கை 21,391 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். அதேசமயம் ஜான்சுராஜ் வேட்பாளர் முகமது அம்ஜத் 17285 வாக்குகள் பெற்றுள்ளார்.
தராரி : சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் விஷால் பிரசாந்த் 10612 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ (எம்எல்) வேட்பாளர் ராஜு யாதவை தோற்கடித்தார். அதேசமயம், ஜான்சுராஜ் அணியின் கிரண் சிங் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ராம்கர் : சட்டமன்றத் தொகுதியில் பாஜக வெற்றிக் கொடியை ஏற்றியுள்ளது. இங்கு பாஜக வேட்பாளர் அசோக்குமார் சிங் 1362 வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் யாதவை தோற்கடித்தார்.
இமாம்கஞ்ச் : தொகுதியில் ஜிதன் ராம் மஞ்சியின் மருமகள் தீபா மஞ்சி வெற்றி பெற்றுள்ளார். தீபா குமாரி 53435 வாக்குகளை பெற்று வெற்றியை பதிவு செய்தார்.
4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.