பீகார் பாலம் விபத்து! கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்.. இன்ஜினியர் சஸ்பெண்ட்!
பீகார் அரசு கட்டுமான நிறுவனமான எஸ்பி சிங்லா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. ரூ.1750 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக, இந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் கங்கை ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த தொடர்பாக துறை ரீதியான ஆய்வு மேற்கொண்டார்.
பாலம் விபத்துக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு கட்டுமான நிறுவனமான எஸ்பி சிங்லா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில் பீகாரின் பாகல்பூரில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பாலம் இடிந்து விழுந்ததால் சாலை கட்டுமானத் துறையின் நிர்வாகப் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலம் மீண்டும் மீண்டும் இடிந்து விழுவதால் கட்டுமான நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.