பீகார் : கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு …!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து உயிர் இழந்துள்ளனர்.
பீகாரில் கடந்த 5 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்க கூடிய கும்பல் அதிகரித்துள்ளதுடன், இதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ருபாலி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்துள்ளனர்.
அப்பொழுது அக்கிராமத்தை சேர்ந்த பல மது பிரியர்கள் இந்த கள்ளசாராயத்தை குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கள்ளச்சாராய விருந்தில் கலந்து கொண்ட பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தகவல் அறிந்து கள்ளச்சாராய விருந்து நடத்திய நபரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அவரும் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 9 பேர் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.