#BIG BREAKING: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.!
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரிரயில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற பணிகள், திட்டங்களை நிறைவேற்றினோம் என்று கூறிய அவர், முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சி செய்துள்ளோம் என்றும்தெரிவித்துள்ளார்.
மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எங்கள் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என குற்றசாட்டியுள்ளார். மக்களுக்காக இரவு, பகல் பாராமல் போராடினோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? மத்திய அரசுக்கு நாராயணசாமி கேள்வி எழுப்பினார். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன.
புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது. புயல் பாதிப்பின் போது எதிர்க்கட்சிகள் எங்கே போனார்கள்? புயல் வெள்ள பாதிப்பின்போது எதிர்க்கட்சிகள் யாரையும் காணவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். சட்ட பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்எல்ஏ ஒருவரது ராஜினாமாவால் நெருக்கடியில் சிக்கிய காங்கிரஸ் அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை. மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி சட்ட பேரவையில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.