ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்… கெஜ்ரிவால் உதவியாளருக்கு சம்மன்.!
சென்னை : ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கபட்ட விவகாரம் குறித்து பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பியும், முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுமான ஸ்வாதி மாலிவால் நேற்று முன்தினம் (மே 14) டெல்லியில் உள்ள அரவிந்த கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்றபோது, அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு எழுத்துபூர்வமாக புகார் எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து டெல்லி பாஜக தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். நேற்று டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு பாஜக மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய பதில் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் , டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் இந்த சம்பவம் தொடர்பாக நாளை மே 17ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.