சுழற்றி அடிக்கும் பிபார்ஜாய் புயல்..! சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைகளுக்கு சூறாவளி எச்சரிக்கை..!
பிபார்ஜாய் புயல் காரணமாக, சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைகளுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார்ஜாய் புயல் இன்று அரபிக்கடலில் இருந்து நகர்ந்து, சௌராஷ்டிரா-கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் நாளை மிக தீவிர புயலாக மாறி, குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்தை, 150 கிமீ வேகத்தில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிபார்ஜாய் புயல் தொடர்ந்து குஜராத்தை நோக்கி நகர்வதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அதாவது, சூறாவளி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிபார்ஜாய் காரணமாக நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், குஜராத்தில் 50,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான தங்கும் இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், குஜராத் முதல் ராஜஸ்தான் வரை பிபார்ஜாய் புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தயார் நிலையில் உள்ளனர்.