நன்றி உள்ளவளாக இருப்பேன் – மக்களுக்கு நன்றி தெரிவித்த மம்தா…!
பவானிப்பூர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெற்றதற்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியங்காவை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வெற்றி செய்தி அறிவிக்கப்பட்ட பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி அவர்கள், இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிப்பூர் தொகுதியில் 58,832 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். முன்பு நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதி வேலை, தேர்தல் தொடங்கியதிலிருந்து மத்திய அரசு என்னை பதவியிலிருந்து அகற்ற பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டியது. மேலும் நான் தேர்தலில் போட்டியிடக்கூடாதவாறு என் காலில் காயமும் ஏற்பட்டது. இருப்பினும் எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.