“மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாரத ரத்னா விருது”- அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!

Default Image

நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா விருதை, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது.குறிப்பாக கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது உச்சத்தை எட்டியது.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது சிறப்பாக பணியாற்றினர்.மேலும்,அரசு மேற்கொண்டு வரும் நோய்தடுப்பு  நடவடிக்கைகளால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான “பாரத ரத்னா” விருதை இந்த ஆண்டு தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த ஆண்டு ‘இந்திய மருத்துவர்’ பாரத ரத்னா விருதைப் பெற வேண்டும். ‘இந்திய மருத்துவர்’ என்றால் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் ஆவர்.எனவே,தியாகம் செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் இது ஒரு உண்மையான மரியாதையாகும். தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தினரையும் கவனிக்காமல் சேவை செய்து வருபவர்களுக்கு விருது கொடுப்பது,ஒரு மரியாதை. இது குறித்து நாடு முழுவதும் மகிழ்ச்சி அடைவார்கள்”,என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய மருத்துவ சங்கத்திற்கு (ஐ.எம்.ஏ) கிடைத்த தரவுகளின்படி, இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.பீகாரில் அதிகபட்சமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர், டெல்லி 109, உத்தரபிரதேசம் 79, மேற்கு வங்கம் 62, ராஜஸ்தான் 43, ஜார்க்கண்ட் 39, ஆந்திரா 38 என இறந்துள்ளனர்.
ஐ.எம்.ஏ படி,கொரோனா தொற்றுநோயின் முதல் அலையில் 748 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்