பாரத் ட்ரோன் சக்தி-2023 : புதிய விமானத்திற்கு குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.!
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமான தளத்தில் இன்றும் (செப்டம்பர் 25) நாளையும் (செப்டம்பர் 26) இரண்டு நாள் “பாரத் ட்ரோன் சக்தி-2023” எனும் வான்வெளி ட்ரோன் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியை காண்பதற்க்கு மத்திய , மாநில துறை உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தனியார் தொழிற்சாலை முக்கிய அதிகாரிகள், ஆயுதப் படை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர், வெளிநாட்டு நட்பு நாடுகளின் பிரதிநிதிகள், கல்வி நிறுவன அதிகரிகள், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ட்ரோன் ஆர்வலர்கள், பொதுமக்கள் என சுமார் 5,000 பேர் இந்த கண்காட்சியை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ட்ரோன் கண்காட்சியை இந்திய விமானப்படை (IAF) மற்றும் ட்ரோன் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (DFI) ஆகியவைகள் இணைந்து நடத்துகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌதாரி இணைந்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் முதல் காட்சி பொருளாக, எளிதில் எடுத்து செல்ல கூடிய சிறிய ரக ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதே போல் விவசாய பணிகளுக்கு பயன்படும் கிசான் ட்ரோன்கள், 50 கிலோ முதல் 100 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஆளில்லா டிரோன்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த ஹிந்தன் விமான தளத்தில் நடைபெற்று வரும் “பாரத் ட்ரோன் சக்தி-2023” கண்காட்சியின்போது, இந்திய விமானப்படையால் புதிதாக வாங்கப்பட்ட C-295 MW விமானத்தினை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அப்போது அந்த விமானதறிக்கு இந்து மத முறைப்படி குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னத்தை அந்த விமானத்தின் மீது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரைந்தார்.