பஞ்சாப் முதல்வராக பகவத் மான் இன்று பதவியேற்பு;பகத்சிங் பிறந்த ஊரில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஆம் ஆத்மி வெற்றி:
இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.மேலும்,இந்த தேர்தலில்,பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.
ராஜ்பவனில் அல்ல;பகத்சிங் பிறந்த ஊரில்தான்:
இதனையடுத்து,தேர்தல் வெற்றி குறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்;ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
பகவத் மான் இன்று பதவியேற்பு:
இந்த நிலையில்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16-ஆம் தேதி) பதவியேற்கிறார். அவர் கூறியபடி சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.சுமார் 3 லட்சம் பேர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக,50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும்,வாகனங்களை நிறுத்துவதற்காக 50 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது.மேலும்,10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மஞ்சள் நிற தலைப்பாகை;துப்பட்டா:
இதனிடையே,இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று பகவந்த் மான் அழைப்பு விடுத்தார்.மேலும்,இவ்விழாவிற்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வரவேண்டும் என்றும்,பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.