பஞ்சாப் முதல்வராக வரும் 16-ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மான்..!
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக வரும் 16-ஆம் தேதி பதவியேற்கிறார். அவர் கூறியபடி பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமிர்தசரஸில் மார்ச் 13-ஆம் தேதி ஆம் ஆத்மி சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெறுகிறது.