பெங்களூரு மழை: வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தல்!!
பெங்களூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில பகுதிகளில் படகுகள் மற்றும் டிராக்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோது, சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையை அடுத்து, பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டன. ஸ்விக்கி மற்றும் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளன.
“பருவமழை தொடர்ந்து நகரின் பலவீனமான உள்கட்டமைப்பில் அழிவை ஏற்படுத்துவதால், நாங்கள் இந்த வாரம் ஆன்லைன் வகுப்புக்கு திரும்பியுள்ளோம். இணையம் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை, குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் எங்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆன்லைன் வகுப்பிற்கு திரும்ப வைத்திருக்கின்றன, ”என்று வைட்ஃபீல்டில் உள்ள இன்வென்ச்சர் அகாடமி தெரிவித்துள்ளது.
பெங்களூரில் இன்று பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல சிரமப்பட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரிச்மண்ட் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.