கன்டெய்னர் லாரி கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிய கார் – 2 குழந்தைகள் 6 பேர் உயிரிழப்பு.!
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் அப்பகுதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தும்கூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனே, காரில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும், பயணிகளும் விரைந்து வந்தனர். SUV யில் இருந்து அவர்களின் உடல்களை வெளியே எடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர்கள் ஏற்கனவே, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் மூன்று கிரேன்கள் மூலம் வாகனங்களை சாலையில் அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், வார விடுமுறை காரணமாக குடும்பத்தினர் வெளியூர் சென்று கொண்டிருக்கும்பொழுது, இன்று காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். எஸ்யூவி மற்றும் லாரி பெங்களூருவில் இருந்து துமகுரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
டிரக்கும், எஸ்யூவி காரும் இணையாகச் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு டிரக் வந்து எதிர்பாரா விதமாக மோதியதில், இந்த பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது.