ரூ.1.61 லட்சம் கோடி கடன்களுக்கு வங்கிகள் அனுமதி- மத்திய நிதியமைச்சகம்.!
அவசர உத்தரவாத கடன் திட்டத்தின் கீழ், சிறு, குறு, மத்திய ரக தொழில்களுக்கு இதுவரை ரூ.1.61 லட்சம் கோடி கடன்களுக்கு வங்கிகள் அனுமதி வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பல்வேறு துறைகள் பெரும் சரிவைச் கண்டது. அவற்றை மீட்டெடுக்க கடந்த மே மாதம் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிதித் தொகுப்பை “சுயச்சார்பு இந்தியா திட்டம்” என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்தது.
அதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ஊக்கமளிக்க ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் கடன்களை வழங்கி வருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, செப்டம்பர் 03, 2020 நிலவரப்படி, பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளால் அவசர உத்தரவாத கடன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ .1,61,017.68 கோடியாக உள்ளது. இதில் ரூ .1,13,713.15 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ரூ .78,067.21 கோடியாக அனுமதித்துள்ளன. இதில், செப்டம்பர் 03 ஆம் தேதி வரை 62,025.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 24 ஆகஸ்ட் 2020 உடன் ஒப்பிடும்போது, அனுமதிக்கப்பட்ட கடன்களின் மொத்த தொகையில் 5,022.06 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 03, 2020 வரை பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் துறை வங்கிகள் இணைந்து வழங்கிய கடன்களின் மொத்த தொகையில் 7,786.16 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.