ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!
நீதிமன்ற விசாரணைக்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில் இருந்த போது அப்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதிமுதல் தற்போது வரை தஞ்சம் அடைந்து உள்ளார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து, அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அந்நாட்டு நீதிமன்றம், அவர் மீதும், அவரது அமைச்சரவை, அப்போது பொறுப்பில் இருந்த ராணுவ உயர் அதிகாரிகள் மீதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்காக ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்புமாறு வங்கதேச அரசு , இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச வெளியுறவுதுறை அமைச்சர் தௌஹித் ஹொசைன் அந்நாட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ வங்கதேச அரசு ஷேக் ஹசீனாவை மீண்டும் டாக்காவிற்கு வரவழைக்க விரும்புவதாக இந்திய அரசாங்கத்திற்கு வாய்மொழியாக (இராஜதந்திர செய்தி) செய்தி அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.
PTI வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, இரு நாட்டு அரசுக்கும் இடையில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தம் ஏற்கனவே உள்ளது என்றும், அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹசீனா மீண்டும் வங்கதேசத்திற்கு அழைத்து செல்ல வங்கதேசத்தில் இருந்து அழைப்பு வந்தால் அவர் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.