பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பெட்டி.., தேர்தல் ஆணையம் விளக்கம்..!
பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அஸ்ஸாமில் உள்ள பதர்கண்டி சட்டசபையில் நேற்று இரவு ஒரு காரில் வாக்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் தேர்தல் ஆணையத்திற்கு சேர்ந்தது அல்ல என்று கூறி பொதுமக்கள் அந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர், நடத்திய விசாரணையில் அசாம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தனர். வாகனத்தில் வாக்குப்பெட்டி இருந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்கு பெட்டி எடுத்துச்சென்ற தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதானதால் எனவே அந்த வழியாக சென்ற வாகனத்திடம் “லிப்ட்” கேட்டு சென்றதாகவும், ஆனால் அது பாஜக வேட்பாளரின் வாகனம் என தெரியாது எனவும் பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.