பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு ஜாமீன்.!
பெங்களூரு: கடந்த வருடம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அப்போது ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டது. இது தொடர்பாக பத்திரிகைகளில் 40 சதவீத கமிஷன் என விளம்பரம் செய்தனர்.
இதனை அடுத்து காங்கிரஸ் மீது அவதூறு வழக்கை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் பாஜக பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.என்.சிவகுமார் அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 1ஆம் தேதி நேரில் ஆஜராகிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற அமர்வு.
இதனை அடுத்து ஜூன் 7ஆம் தேதியான இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் முன்னர் கூறியிருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி. பின்னர் அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகினர். நேரில் ஆஜராகிய ராகுல் காந்திக்கும் ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.