செவிலியரின் கையில் இருந்து கைநழுவி விழுந்த குழந்தை உயிரிழப்பு…!
லக்னோவில் உள்ள சின்ஹாட்டின் மல்ஹவுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், செவிலியரின் கையில் இருந்து கைநழுவி விழுந்து குழந்தை உயிரிழப்பு.
லக்னோவில் உள்ள சின்ஹாட்டின் மல்ஹவுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை செவிலியரின் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்து இறந்துள்ளது. பிரசவத்திற்குப் பின் குழந்தையை துண்டில் சுற்றாமல் கையிலே தூக்கி சென்ற போது தவறி கீழே விழுந்து குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை இறந்தது குறித்து மருத்துவமனை அதிகாரிகள், குழந்தை பிறந்தபோது இறந்துதான் பிறந்ததாக கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தான் காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் குழந்தை இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து, செவிலியர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ராஜ்புத் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை அதிகாரி அபிஷேக் பாண்டே கூறுகையில், மருத்துவமனையின் பரிந்துரையின் பெயரில் சம்பவத்தன்று குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஏப்ரல் 20-ஆம் தேதி இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் மரணம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
இது குறித்து, குழந்தையின் தந்தை ராஜ்புத் கூறுகையில், ஏப்ரல் 19ஆம் தேதி எனது மனைவிக்கு பிரசவ வலி ஆரம்பித்தது. இதனால் அன்று இரவு பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது குழந்தை இறந்து பிறந்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் என் மனைவியிடம் பேசியபோது பிரசவம் நார்மல் என்று கூறியதாகவும், குழந்தையை உயிருடன் பார்த்ததாகவும் கூறினார். ஒரு செவிலியர் குழந்தையை துணியில்லாமல், தன் கையில் எடுத்து செல்வதை கண்டதாகவும் அவர் கூறினார் அப்போது குழந்தையின் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து என் மனைவி பீதியடைந்து குத்தியுள்ளார். செவிலியர் மற்றும் பணியாளர்கள் அவள் வாயை மூடிக் கொள்ளுமாறு மிரட்டி உள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.