பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை…! மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை இழுத்து சென்ற தெருநாய்கள்..!
ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை நாய் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில், ஹார்ட் அண்ட் மதர் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், ஜூன் 25 அன்று, ஷப்னம் என்ற கர்ப்பிணிப் பெண் குழந்தையை பெற்றேடுப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நாளில் இரவு 8:15 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஷப்னம் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பொது வார்டில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டார். அவருடன் அவரது உறவினர்கள் இருந்தனர். சிறிது நேரம் கழித்து, அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அறையின் தரையில் தூங்கிக் கொண்டிருந்தனர், குழந்தைக்கு பால் ஊட்டிய பிறகு, குழந்தையை தரையில் படுக்கவைத்துள்ளனர்.
அதிகாலை 2:15 மணியளவில் அவரது உறவினர்களில் ஒருவர் கண்விழித்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. குழந்தையை மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளனர். அனால் குழந்தை கிடைக்கவில்லை. பின் மருத்துவமனைக்கு வெளியே சென்று பார்த்த போது, ஒரு நாயின் வாயில் குழந்தை இருந்ததாகி கண்டுபிடித்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு, சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தெருநாய்கள் ஒரு குழந்தையைப் பிடித்துச் சென்றதைக் கூட அறியாத மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை இறந்தவரின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளில், அதிகாலை 2:07 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே நாய் ஒன்று குழந்தையை தூக்கிச் செல்வதைக் காட்டியது.