தேசிய விண்வெளி தினம் எப்போது.? ஏன்.? இஸ்ரோ அதிகாரபூர்வ தகவல்.!
டெல்லி : நாளை (ஆகஸ்ட் 23) முதல் தேசிய விண்வெளி தினத்தை இந்தியா கொண்டாட இருக்கிறது என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ்.சோம்நாத் பேட்டியில் கூறியிருக்கிறார்.
தேசிய விண்வெளி தினம் : எப்போது ? ஏன் ?
கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி மையம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனால், உலக நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்த 4-வது நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா அப்போது படைத்தது.
அந்த வெற்றி சாதனையை நினைவு கூறும் விதமாக நாளை முதல் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என எஸ்.சோம்நாத் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். மேலும், நாளை தேசிய விண்வெளி தினத்தன்று இஸ்ரோவின் சந்திரயான்-3 மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டும் என்று மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார்.
சந்திரயான்-3 ..!
சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நிலவில் திட்டமிட்டபடி ஆராய்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்து நிலவின் புவியியல் மற்றும் கனிமவளம் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிலவின் தோற்றம் மற்றும் அங்கு உள்ள பரிணாம வளர்ச்சி போன்றவற்றை நன்கு புரிந்து கொள்ள இந்த திட்டம் உதவும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இஸ்ரோ தலைவர் பேட்டி ..!
மேலும் சந்திரயான்-3 திட்டத்தைக் குறித்தும், தேசிய விண்வெளி தினத்தைக் குறித்தும் இன்று இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ்.சோம்நாத் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது பேசி இருந்தார். அவர் கூறுகையில், “நிலவின் தெற்குப் பகுதியில் சந்திரயான்-3 தரையிறங்கியதன் வெற்றியை நினைவு கூரும் வகையில் நாளை ஆகஸ்ட் 23, 2024 அன்று முதல் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்.
அதன் பிறகு, நாங்கள் டெல்லியில் பிரிதான் மந்திரி சங்க்ரஹாலயாவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கிறது”, என எஸ்.சோம்நாத் கூறி இருந்தார்.