பரபரப்பு :ஜாமீன் ரத்து செய்த பெண் நீதிபதியை சேம்பரில் பூட்டிய வக்கீல்கள்..!
திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் பாலராமபுரம் அருகே இவர் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் சென்ற ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு திருவனந்தபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் டிரைவர் மணி மற்றும் ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட இருந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் முன் டிரைவர் மணி அந்த சாட்சியிடம் தன்னை யாரென்று தெரியாது என கூற வேண்டும் என மிரட்டியுள்ளார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் தீபா மோகன் முன்னிலையில் விசாரணை வந்தது.அப்போது விசாரணையில் அந்த சாட்சி டிரைவர் மணி தன்னை மிரட்டியதாக கூறினார் இதையடுத்து மணியின் முன்ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மணி சார்பில் ஆஜரான வக்கீல் சக வக்கீல்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார். பத்திற்கும் மேற்பட்ட வந்த வக்கீல்கள் அங்கு வந்து மணியின் ஜாமினை ரத்து செய்ய கூடாது என கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டை சேம்பரில் பூட்டி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த மற்ற வக்கீல்கள் அவரை மீட்டனர். இதுகுறித்து தீபா மோகன் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் கொடுத்துள்ளார்.