கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!
கனடாவில் உள்ள ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடித்தியுள்ளதால் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கோயிலிலிருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கனடாவில் அமைந்துள்ள தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டனில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஹிந்து கோயிலின் முன்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
மேலும், கோயிலிலிருந்த பக்தர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கொடிக் கம்பங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அந்த கோவில் அமைந்துள்ள அந்த இடம் வன்முறைக் களமாக மாறியது. மேலும், அங்கிருந்த ஹிந்து மக்களை விரட்டி அடிப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கனடாவில் உள்ள ஹிந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்டத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அதேபோன்று நமது அயலக மக்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் அதிர்ச்சிகரமானது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்”, என பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
I strongly condemn the deliberate attack on a Hindu temple in Canada. Equally appalling are the cowardly attempts to intimidate our diplomats. Such acts of violence will never weaken India’s resolve. We expect the Canadian government to ensure justice and uphold the rule of law.
— Narendra Modi (@narendramodi) November 4, 2024