அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!
அல்லு அர்ஜுன் வீடு தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது.
அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார்.
பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றுகொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தார் அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்” என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி காட்டமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளத. அவர்கள் பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ட்வீட் செய்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.