வன்முறையில் போராட்டங்கள் என்ற பெயரில் ஈடுபடுவது அடிப்படை உரிமையாகாது!
உச்சநீதிமன்றம் போராட்டங்கள் என்ற பெயரில், வன்முறையில் ஈடுபடுவது ஒருபோதும் அடிப்படை உரிமை ஆகாது என தீர்ப்பளித்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில், தனி மாநிலம் கோரி போராட்டங்களில் ஈடுபட்ட கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குருங், தன் மீதான அரசின் கைது நடவடிக்கைகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, அசோக் பூஷன் ((A.K.Sikri, Ashok Bhusan)) ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் என்பது தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி, எதிர்ப்பையும், வலியுறுத்தலையும், அமைதியாக ஒன்றுகூடி பதிவு செய்வதேயாகும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.
அதேவேளையில், போராட்டங்கள் என்ற பெயரில், வன்முறையில் ஈடுபடுவதற்கும், பொதுமக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும், இயல்பு வாழ்க்கையை முடக்குவதற்கும், யாருக்கும், எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை என்றனர். பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின்படி, போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதும், கல்வீச்சில் ஈடுபடுவதும், ஒருபோதும் அடிப்படை உரிமை ஆகாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். போராட்டம் என்பது, சம்பந்தப்பட்ட நபருக்கோ, அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புக்கோ, தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதாக, எடுத்துரைப்பதாக அமைய வேண்டுமே தவிர, அமைதியை குலைக்க சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.