5 மடங்கு கூடுதல் பணம் கொடுத்த ATM.. அலைமோதிய மக்கள் கூட்டம்! எங்கே தெரியுமா?
நாக்பூரில் உள்ள ஏடிஎம்மில் 5 மடங்கு கூடுதல் பணம் வருகிறது என செய்தி பரவியதால் அலைமோதியது மக்கள் கூட்டம்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தான் எடுக்க வந்த பணத்தை விட 5 மடங்கு கூடுதல் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் வந்ததை தொடர்ந்து, அந்த ஏடிஎம்-மிற்கு வெளியே ஏராளமானோர் பணம் எடுக்க திரண்டுள்ளனர். அதாவது, ஒரு நபர் ஏடிஎம்மில் இருந்து ரூ.500 எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், அந்த இயந்திரம் ரூ.500 மதிப்புள்ள ஐந்து கரன்சி நோட்டுகளை வழங்கியது. அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயன்றபோது ரூ.2,500 வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏடிஎம்மில் ஐந்து மடங்கு கூடுதல் பணம் வழங்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியதால், அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நாக்பூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் கபர்கெடா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர், அங்குவந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை மூடிவிட்டு வங்கிக்கு தகவல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், ஏடிஎம்மில் ரீஃபில் செய்யும் போது ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்பது கண்டறியப்பட்டது.
இதற்கு காரணம் என்னவென்றால் ரூ.100 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கான ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக காபர்கெடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.