டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!
டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அதிஷிக்கு ஆளுநர் சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் வெள்ளியன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தாலும், அவர் வகித்து வந்த டெல்லி முதமைச்சர் பதவியை தொடர முடியாதபடி உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.
இதனை அடுத்து கடந்த வாரம் தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் வரும் டெல்லி மாநில தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னர் டெல்லி முதலமைச்சார் பதவியை ஏற்கிறேன் என அறிவித்து இருந்தார்.
பின்னர், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, டெல்லி மாநில பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக அறிவிக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.
இதனை அடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மேலும், அதிஷியை டெல்லி முதல்வராக அறிவிக்க ஆதரவு கடிதத்தையும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அளித்தனர்.
இந்த அரசியல் மாற்றங்களை அடுத்து, இன்று டெல்லி ஆளுநர் மாளிகையில், டெல்லி மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷிக்கு ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவருடன், கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், முகேஷ் அஹ்லாவத், கைலாஷ் கெஹ்லோட், இம்ரான் ஹுசைன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
43 வயதான அதிஷி, டெல்லியின் 8வது முதலமைச்சராகவும், சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு பிறகு டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக இவர் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அதிஷி என 2 பெண் முதலமைச்சர்கள் உள்ளனர்.