டெல்லி அரசியலில் அடுத்த திருப்பம்! ராஜினாமா செய்தார் முதலமைச்சர் அதிஷி!
டெல்லி முதலமைச்சர் பொறுப்பை அதிஷி மர்லினா ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி : 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று ரிசல்ட் நேற்று (பிப்ரவரி 8) வெளியானது. 2013, 2015, 2020 என்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே வென்றது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகிய முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் இத்தேர்தலில் தோல்வி கண்டனர்.
இந்த தேர்தலில் டெல்லி முதலமைச்சர் பொறுப்பில் இருந்த அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தங்கள் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, புதிய அரசு அமைக்க எதுவாக தனது முதலமைச்சர் பொறுப்பை அதிஷி மர்லினா ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை டெல்லி ஆளுநர் வினை குமார் சக்சேனாவிடம் வழங்கினார் அதிஷி.
டெல்லி முதலமைச்சராக பொறுப்பில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த 21 செப்டம்பர் 2024 முதல் அதிஷி மர்லினா டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.