#BREAKING: லக்னோ விமான நிலையத்தில் ராகுல்காந்தி தர்ணா..!
லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சப் முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் முதல்வர் சரண்ஜித் சிங் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷிற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, லக்கிம்பூர் வன்முறைக்கு பல தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில் உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்தது. பின்னர், லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதன்காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சப் முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் முதல்வர் சரண்ஜித் சிங் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, ராகுல் காந்தி உத்தரபிரதேச அரசால் எனக்கு என்ன அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போலீசார் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை.
நாங்கள் எங்கள் காரில் (லக்கிம்பூர் கேரிக்கு) செல்ல விரும்புகிறோம். ஆனால் போலீசார் எங்களை அவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். அதனால், நான் இங்கே தர்ணாவில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.