#Breaking:மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து – 11 பேர் சடலமாக மீட்பு…!
- மும்பையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்,தென்மேற்கு பருவ மழையானது கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது.
இந்த பலத்த மழையால் சாலைகள் மற்றும் இரயில் தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மும்பையில் பெய்த கனமழை எதிரொலியாக,மலாட் மேற்கு பகுதியில் உள்ள பழமையான அடுக்கு குடியிருப்பானது நேற்றிரவு 10 மணியளவில் இடிந்து விழுந்தது.இதன்காரணமாக,வீடுகளுக்குள் இருந்த 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதுமட்டுமல்லாமல்,இடிபாடுகளுக்குள் சிக்கிய 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக பி.டி.பி.ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,கட்டிடத்திற்குள் இருந்து,இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில்,கட்டமைப்புகள் நல்ல நிலையில் இல்லாததால் அருகிலுள்ள மூன்று கட்டிடங்களில் இருந்து வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் மலாட் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்,இதுகுறித்து,மும்பை மாநகராட்சியின் கூடுதல் மாநகர காவல் அதிகாரி திலீப் சாவந்த் கூறுகையில்:
“இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.ஏனெனில்,ஒரு ஜி +2 கட்டிடம் மற்றொரு கட்டிடத்தின் மீது விழுந்தது.இதனால்,வீடுகளுக்குள் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே,இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முறையான விசாரணையை மேற்கொண்டு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள்”,என்று தெரிவித்தார்.