சத்தீஸ்கரில் சூதாட்டம்.. ராஜஸ்தானில் சிவப்பு டைரி.! காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றசாட்டு.!
இந்த ஆண்டு நடைபெறுகிற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், முதல் கட்டமாக மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் 70.87% வாக்குகள் பதிவானது.
அதேபோல, மிசோரம் மாநிலத்தில் 75.88% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இதே நாளில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் தாமோவில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
Assembly Election 2023: சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!
இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இன்று உலகம் முழுவதும் இந்தியாவை புகழ்ந்து பாடுகிறார்கள். இந்தியாவின் சந்திரயான்-3 எந்த நாடும் எட்டாத இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. நமது விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.” என்று புகழ்ந்து கூறினார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஏழைகளின் பணத்தைப் பிடுங்குவதும், மோசடிகளில் ஈடுபடுவதும், நாற்காலிக்காக சமுதாயத்தைப் பிரிப்பதும் காங்கிரஸ் தான். காங்கிரசுக்கு ஒரு மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி முக்கியமில்லை.”
“சத்தீஸ்கரில் சூதாட்டமும், ராஜஸ்தானில் காங்கிரஸின் ரெட் டைரியும் உள்ளது. கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. 2018 ஆம் ஆண்டில், அவர்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தனர், ஆனால் விவசாயிகள் 15 மாதங்கள் காத்திருந்தனர், இன்னும் எதுவும் செய்யப்படவில்லை.” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.