சொத்து குவிப்பு வழக்கு : இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகன் யோஷித ராஜபக்ச கைது!
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை: முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன், யோஷித ராஜபக்ச அரசாங்கத்திற்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய பொருளாதார மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் சொத்துக் குவிப்பு புகாரில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷித மீது குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னதாக வழக்குப்பதிவு செய்திருந்தது.
அதனை தொடர்ந்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையையும் நடத்தியது. ஜனவரி 3 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய போது இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்ற என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என வாக்குமூலம் அளித்திருந்தாலும், சந்தேகங்கள் தொடர்ந்ததால் இன்று கைது செய்யப்பட்டார்.
யோஷித ராஜபக்ச கதிர்காமம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை தனிநபர் பயன்பாட்டுக்கு மாற்றியுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்த காரணத்தால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இப்பொது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரின் காவலில் உள்ளார், விரைவில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது.