சட்டப்பேரவை தேர்தல் : மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அனல் பறக்கும் இறுதிப் பிரச்சாரம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது.
மகாராஷ்டிரா தேர்தல் களம் :
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டியானது நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவ சேனா (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகாராஷ்டிராவில் மொத்தம் 9 கோடியே 70 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் இன்று தங்களது வாக்கை செலுத்த தயாரான நிலையில் உள்ளனர்.
ஜார்கண்ட் தேர்தல் களம் :
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலானது தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த நவ.-13-ந் தேதி நடைபெற்றது. தற்போது, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்றைய நாள் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்கண்டில், மொத்தம் 1 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இன்று தங்களது வாக்கை செலுத்த தயாரான நிலையில் உள்ளனர்.