#BREAKING: ஓமைக்ரான் எதிரொலி: மேலும் ஒரு மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்..!
அசாம் முழுவதும் நாளை இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாக வரும் ஓமைக்ரான்( Omicron) தொற்றை கருத்தில் கொண்டு, பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளன. இப்போது அஸ்ஸாமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் கேசவ் மஹந்த் ஒரு புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை அறிவித்தார். இதில் இரவு 11:30 முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
அசாமின் புதிய உத்தரவு படி, அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஷோரூம்கள், மளிகைக் கடைகள் இரவு 10:30 மணிக்குள் தங்கள் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 17 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 115 பேர் குணமடைந்து விட்டதாகவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31, 2021 அன்று பொருந்தாது என அசாம் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன் இரவு ஊரடங்கை மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.