ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து மக்கள் தப்பி ஓட்டம்-அசாம்
அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர்.
இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க ரயில் நிலையத்திலிருந்து மக்கள் தப்பி ஓடிய வீடியோ பதிவு சமூக வளைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் குவஹாத்தி நகரில் உள்ள ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 500 பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர். அதாவது கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கிய பயணிகளின் பெரிய கூட்டம் கொரோனா சோதனைக்கு பயந்து ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடியது.
மேலும் அதிகாரிகள் முயற்சித்து கிட்டத்தட்ட 170 பேரைக் கண்டுபிடித்தனர் அவர்களை பரிசோதித்ததில் 14 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது.
அதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.அதன்பின் போலிசார் அரசின் கொரேனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜாகிரோட் காவல் நிலையத்தில் ஐபிசி மற்றும் அசாம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.