500 ரூபாய் நோட்டுகளில் படுத்து உறங்கும் அசாம் அரசியல் தலைவர்!

Benjamin Basumatary

Assam: அசாமில் அரசியல் தலைவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளில் தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அசாமில் பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ரூபாய் நோட்டுகள் குவியலில் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி லிபரலின் (UPPL) முன்னாள் தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

இந்த சூழலில் பெஞ்சமின் பாசுமாதாரி 500 நோக்குகள் அடுக்கி வைத்திருக்கும் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு அரை நிர்வாணமாக தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த புகைப்படம் UPPL மற்றும் பாஜகவினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

போடோலாந்து பிராந்தியத்தில் UPPL கட்சியானது பிரமோத் போரோ தலைமையில் உள்ளது. இந்த கட்சி தற்போது அசாமில் பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பெஞ்சமின் பாசுமாதாரியின் புகைப்படம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முழுமையான விசாரணையை கோரியுள்ளனர். மேலும், பாசுமாதாரி ஊழலில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த குறித்து அசாம் எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா கூறியதாவது, இது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வைரலான புகைப்படம் பண மூட்டைகளுடன் UPPL தலைவர் உறங்குவதை சித்தரிக்கிறது. ஊழலின் இந்த அப்பட்டமான காட்சி உடனடி நடவடிக்கையை கோருகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை அல்லது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, பெஞ்சமின் பாசுமாதாரி UPPL தலைவராக இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுக்காக அவரை கட்சியிலிருந்து கடந்த ஜனவரி 10ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்