போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பெண்களை ஏமாற்றிய ஆசாமி..! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!
பெங்களூரில் அப்பாவி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் போலி இன்ஸ்டாக்ராம் கணக்குகள் மூலம் அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் டில்லி பிரசாத் எனும் நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது உண்மையான இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு மத்தியில் போலியான 5 இன்ஸ்டாகிராம் கணக்குகளை வைத்திருந்துள்ளார். அதில் 2 கணக்குகளில் தன்னை ஒரு பெண்ணாகவும், நிறுவன மேலாளராகவும் காட்டிக்கொண்டுள்ளார்.
இந்த போலி கணக்குகளில் இருந்து பல பெண்களிடம் அரட்டை அடித்த அவர், தனக்கு தெரிந்த நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் கூறியுள்ளார். பிரசாத்தின் வார்த்தைகளை நம்பிய பெண்கள் அவரைச் சந்திக்க வருகையில் நகரத்தில் உள்ள ஹோட்டல் அறைகளில், பிரசாத் அவர்களை உடலுறவு கொள்ள வற்புறுத்தி அதனை தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து பெண்களை மிரட்டி வந்துள்ளார்.
அவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரசாத்தை கைது செய்தனர். இது குறித்து பெங்களூரு காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்களை அவரது வலையில் சிக்க வைத்ததாகவும், அதில் பெரும்பாலும் ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண்களையே அவர் வீடியோ எடுத்து மிரட்டியாதகவும் அவர் தெரிவித்தார். பிரசாத்திடம் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.