புதுச்சேரியில் சொன்னபடியே சிலிண்டருக்கு மானியம் கொடுத்து விட்டோம் – தமிழிசை சௌந்தரராஜன்
தமிழ்நாட்டில் கேஸ் மானியம் வழங்குவதாக தெரிவித்தனர், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அந்தவகையில், புதுச்சேரியில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்த நேற்று அரசாணை வெளியானது.
அதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கவும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த சிலிண்டர் மானியத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் கேஸ் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதியாக சிலிண்டருக்கு மானியம் தருவோம் என்று கூறினார்கள், இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் புதுச்சேரியில் சொன்னபடியே சிலிண்டருக்கு மானியம் கொடுத்து விட்டோம் என்றார்.
மேலும், தமிழகத்தில் மாதந்தோறும் ரூ.1,000 என்ற மகளிர் உரிமைத் தொகையை பெற கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது திமுக அரசு. ஆட்சிக்கு வந்ததில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.