அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.? அடுத்த டெல்லி முதலமைச்சர் யார்.?
அரவிந்த் கெஜ்ரிவால் தனது டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து விட்டார். அடுத்த வருட சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்பேன் எனக்கூறியுள்ளார் .
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் வகித்து வரும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் அடுத்த டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி, தற்போது டெல்லி மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்தும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதாவது, அரசு கோப்புகளில் கையெழுத்திட கூடாது. தலைமை செயலகம் செல்ல கூடாது . வழக்கு பற்றி வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது. உள்ளிட்ட கண்டிஷன்கள் குறிப்பிடப்பட்டன.
இதனை அடுத்து, நேற்று (ஞாயிறுக்கிழமை) ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். மேலும், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு பின்னர், தான் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் 2025 பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே அதாவது நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இப்படியான சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின்னர், சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் டெல்லி மாநில முதல்வர் பதவிக்கு யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், மக்கள் தீர்ப்புக்கு பின்னர் தான் தான் பதவிக்கு திரும்புவேன் என கூறியுள்ளார் . அதனால் டெல்லி முதல்வர் பதவிக்கு மணீஷ் சிசோடியா வர வாய்ப்பில்லை.
அடுத்ததாக டெல்லி முதல்வர் (இடைக்கால) பதவிக்கு முன்னணியில் இருப்பவர் மாநில கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அதிஷி. ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு முகமாக அறியப்படுபவர், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கூட கெஜ்ரிவாலுக்கு பதிலாக தேசிய கொடியேற்றிவர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக , 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக வென்ற சௌரப் தற்போது டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பில் இருகிறார். 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ராஜீவ் சதா , ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோரும் டெல்லி இடைக்கால முதலமைச்சர் ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது .
இந்த யூகங்களுக்கு பதில் கிடைக்க , முதலில் அதிகாரபூர்வமாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பின்னர் ஆம் ஆத்மி கட்சித் தலைமை ஆலோசித்து இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.