அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! டெல்லி முதல்வராகிறார் அதிஷி.!
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார்.
இருந்தும், டெல்லி மாநில முதல்வர் பதவியை தொடர முடியாத வண்ணம் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், புதிய முதல்வராக ஆம் ஆத்மி மூத்த நிர்வாகியும், டெல்லி அமைச்சருமான அதிஷியை முன்மொழிந்தார் கெஜ்ரிவால். இன்னும் சில மாதங்களில் வரவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்பேன் எனக் கூறினார்.
இச்சம்பவங்களை அடுத்து, இன்று டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் தற்போது தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி விரைவில் பதவியேற்க உள்ளார். அதற்கான ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் டெல்லி ஆளுநரிடம் கெஜ்ரிவால் அளித்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு முதல் டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.